சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

11.039   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருத்தொகை

-
பூவார் திருநுதல்மேல் பொற்சுட்டி இட்டொளிரக்
கோவாக் குதலை சிலம்பரற்ற - ஒவா
தழுவான் பசித்தான் என்றாங் கிறைவன் காட்டத்
தொழுவான் துயர்தீர்க்கும் தோகை - வழுவாமே
முப்பத் திரண்டறமும் செய்தாள் முதிராத
செப்பொத்த கொங்கைத் திருநுதலி - அப்பன்
அருளாலே ஊட்டுதலும் அப்பொழுதே ஞானத்
திரளாகி முன்னின்ற செம்மல் - இருள்தீர்ந்த
காழி முதல்வன் கவுணியர்தம் போர்ஏறு
ஊழி முதல்வன் உவன் என்று - காட்டவலான்
வீழி மிழலைப் படிக்காசு கொண்டபிரான்
பாழி அமணைக் கழுவேற்றினான் - பாணர்
யாழை முறித்தான் எரிவாய் இடும்பதிகம்
ஆழி உலகத் தழியாமற் - காட்டினான்.
ஏழிசை வித்தகன் வந்தேனோரும் வானோரும்
தாழும் சரணச் சதங்கைப் - பருவத்தே
பாலையும் நெய்தலும் பாடவலான் சோலைத்
திருவா வடுது றையில் செம்பொற் - கிழிஒன்
றருளாலே பெற்றருளும் ஐயன் தெருளாத
தென்னவன் நாடெல்லாம் திருநீறு - பாலித்த
மன்னன் மருகல்விடம் தீர்த்த பிரான் பின்னைத்தென்
கோலக்கா வில்தாளம் பெற்றிக் - குவலயத்தில்
முத்தின் சிவிகை அரன் கொடுப்ப முன்னின்று
தித்தித்த பாடல் செவிக்களித்தான் - நித்திலங்கள்
மாடத் தொளிரும் மறைக்காட் டிறை கதவைப்
பாடி அடைப்பித்த பண்புடையான் - நீடும்
திருவோத்தூர் ஆண்பனையைப் பெண்பனைஆ கென்னும்
பெருவார்த்தை தான் உடைய பிள்ளை - மருவினிய
கொள்ளம்பூ தூர்க்குழகன் நாவா யது கொடுப்ப
உள்ளமே கோலாக ஊன்றினான் - வள்ளல்
மழவன் சிறு மதலை வான்பெருநோய் தீர்த்த
குழகன் குலமறையோர் கோமான் - நிலவிய
வைகை ஆற் றே டிட்டு வான்நீர் எதிர்ஒட்டும்
செய்கையான் மிக்க செயலுடையான் - வெய்யவிடம்
மேவி இறந்த அயில் வேற்கண் மடமகளை
வாவென் றழைப்பித் திம்மண்ணுலகில் - வாழ்வித்த
சீர்நின்ற செம்மைச் செயலுடையான் நேர்வந்த
புத்தன் தலையைப் புவிமேல் புரள்வித்த
வித்தகப் பாடல் விளம்பினான் - மொய்த்தொளிசேர்
கொச்சைச் சதுரன்தன் கோமானைத் - தான்செய்த
பச்சைப் பதிகத் துடன்பதினா றாயிரம்பா
வித்துப் பொருளை விளைக்க - வலபெருமான்
முத்திப் பகவ முதல்வன் திருவடியை
அத்திக்கும் பத்தர்எதிர் ஆணைநம - தென்னவலான்
கத்தித் திரிபிறவிச் சாகரத்துள் ஆழாமே
பத்தித் தனித்தெப்பம் பார்வாழத் - தந்தபிரான்
பத்திச் சிவம்என்று பாண்டிமா தேவியொடும்
கொற்றக் கதர்வேற் குலச்சிறையும் - கொண்டாடும்
அற்றைப் பொழுதத் தமணர்இடும் வெந்தீயைப்
பற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனை - என்னவல்லான்
வர்த்தமா னீசர் கழல்வணங்கி வாழ்முருகன்
பத்தியை ஈசன் பதிகத்தே - காட்டினான்
அத்தன் திருநீல நக்கற்கும் அன்புடையான்
துத்த மொழிக்குதலைத் தூயவாய் - நன்னுதலி
கொத்தார் கருங்குழற்கும் கோலச்செங் - கைம்மலர்க்கும்
அத்தா மரைஅடிக்கும் அம்மென் குறங்கினுக்கும்
சித்திரப்பொற் காஞ்சி சிறந்தபே - ரல்குலுக்கும்
முத்தமிழ்நூல் எல்லாம் முழுதுணர்ந்த பிள்ளையார்க்கு
ஒத்த மணம் இதுஎன் றோதித் - தமர்களெல்லாம்
சித்தம் களிப்பத் திருமணம்செய் காவணத்தே
அற்றைப் பொழுதத்துக் கண்டுட - னேநிற்க
பெற்றவர்க ளோடும் பெருமணம் போய்ப்புக்குத்
தன்அத்தன் அடியே அடைந்தான் அழகிதே.


[ 1]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song